Wednesday, September 06, 2006

திவ்ய தேசம் - 2 திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்)

************************
இவ்வைணவ திவ்ய தேசம், உத்தமர் கோயில் (அல்லது பிட்சாண்டர் கோயில்) என்ற கிராமத்தில், திருச்சிக்கும் விழுப்புரத்துக்கும் இடையே உள்ள ரயில் பாதையில் அமைந்துள்ளது. திருவரங்கத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது.

புருஷோத்தமன் என்றறியப்படும் இக்கோயிலின் மூலவர், கிழக்கு நோக்கி புஜங்க (பாம்பின் மேல்) சயனத்தில் காட்சியளித்து அருள் பாலிக்கிறார். மஹாவிஷ்ணு, புஜங்க சயனத்தில் 20 திவ்ய தேசங்களில் காட்சி அளிக்கிறார். தாயார் பூர்வதேவி மற்றும் பூர்ணவல்லி என்று அழைக்கப்படுகிறார். வாழை மரத்தை இத்திருத்தலத்தின் தலவிருட்சம் எனப்படுகிறது. இந்த திருக்கோயிலுக்கு நேபஷேத்திரம் மற்றும் ஆதிமபுரம் என்ற பெயர்களும் உண்டு. இங்குள்ள விமானமும், தீர்த்தமும் (குளம்) உத்யோக விமானம் மற்றும் கத(ர)ம்ப தீர்த்தம் எனப்படுகின்றன. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியின் ஆறாம் திருமொழி - கைம்மானத்தில் காணப்படும் பாசுரத்தில் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். அப்பாசுரம் இதோ:

Photobucket - Video and Image Hosting

1399@..
பேரானைக்* குறுங்குடி எம்பெருமானை*திருதண்கால்
ஊரானைக்* கரம்பனூர் உத்தமனை*முத்திலங்கு
காரார் திண்கடலேழும்* மலையேழ் இவ்வுலகேழுண்டும்*
ஆராதென்றிருந்தானைக்* கண்டது தென்னரங்கத்தே (5.6.2)இக்கோயிலின் விசேஷம், மும்மூர்த்திகள் எனப்படும் சிவனுன், விஷ்ணுவும், பிரம்மனும் ஒரே இடத்தில் தங்கள் துணைவியருடன் எழுந்தருளியிருப்பது தான் ! அதனாலேயே, இக்கோயில் கதம்ப ஷேத்திரம் எனப்படுகிறது. இங்கு கிடைக்கும், (அரிதாகக் காணப்படும்) நாகலிங்கப்பூ கோயில் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. விஷ்ணு, மகாலஷ்மி தவிர, சிவன், பார்வதி (வடிவுடையம்மன்), பிரம்மா, சரஸ்வதி ஆகியோருக்கு தனி சன்னதிகள் இங்கு உள்ளன. மேலும், ஆண்டாள், வரதராஜர், வேணுகோபாலன், ராமர், விநாயகர், நடராஜர், சுப்ரமணியர், சனீஸ்வரர் மற்றும் ஆஞ்சநேயருக்கு இக்கோயிலில் சன்னதிகள் இருக்கின்றன.

பரமசிவன் குடும்பத்தோடு, பிட்சாதன மூர்த்தியாக இங்கு காட்சியளிப்பது, விசேஷமாகக் கருதப்படுகிறது. திருவரங்கம் கோயில் ஒரு முறை புதுப்பிக்கப்பட்டபோது, திருமங்கையாழ்வார் இங்கு தங்கியிருந்து தான் திருப்பணிகளை பார்வையிட்டார். பாண்டிய மற்றும் சோழ காலத்து கல்வெட்டுகளை இக்கோயிலில் காணலாம்.

ஒரு முறை, கோபத்தில் சிவன் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுத்தபோது, அத்தலையின் ஓடு சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதாகவும், மகாலஷ்மியிடம் பிட்சை பெற்றதன் மூலம், சிவனுக்கு விமோசனம் கிடைத்ததாகவும் தலபுராணம் கூறுகிறது. மற்றொரு பழங்கதை, மகாவிஷ்ணு இவ்விடத்தில் கதம்ப மர வடிவில் நின்றதாகவும், பிரம்மன் அவரை வழிபட்டதாகவும், பிரம்மனின் கமண்டல நீர் கதம்ப ஆறு என்ற பெயரில் ஓடியதாகவும், பின்னாளில் காதம்ப முனி இங்கு விஷ்ணுவை வழிபட்டதாகவும் கூறுகிறது.

புருஷோத்தமப் பெருமானின் பிரம்ம உத்சவம் சித்திரை மாதத்திலும், சிவபெருமானுக்கான உத்சவம் வைகாசி மாதத்திலும் நடைபெறுகின்றன. மாசி மாத உத்சவ சமயம், ஸ்ரீரங்கத்தின் உத்சவ மூர்த்தி கதம்ப தீர்த்தத்தில் எழுந்தருள்கிறார்.
***************************
என்றென்றும் அன்புடன்
பாலா

6 மறுமொழிகள்:

குமரன் (Kumaran) said...

பாலா. உத்தமர் கோவிலைப் பற்றி முன்பே சிறிது படித்திருந்தாலும் இவ்வளவு தெளிவாக இப்போது தான் படிக்கிறேன். மிக்க நன்றி.

திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் தந்ததற்கு நன்றி. அருமையாக இருக்கிறது பாசுரம்.

பெரியவனை, திருக்குறுங்குடி எம்பெருமானை, திருதண்கால் ஊரானை, கரம்பனூர் உத்தமனை என்று பல திவ்ய தேசங்களின் பெருமாள்களைப் பாடிவிட்டுப் பின்னர்
முத்துகள் இலங்கும் கருமையான ஒலி செய்யும் பெருங்கடல்கள் ஏழும் மலையேழும் இவ்வுலகங்கள் ஏழும் உண்டும் அவை ஆராது தன் பெரும்பசிக்குச் சோளப்பொறி போல் இருக்கிறது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே என்று பாடியிருக்கிறார். இந்த 'கடல் ஏழு, மலை ஏழு, உலகங்கள் ஏழு இவை உண்டு பின்னும் ஆராது என்றிருந்தானை' என்பது புதிதாக இப்போது தான் படிப்பது. இதுவரைப் படித்ததில்லை; கேட்டதில்லை. சிறப்பாக இருக்கிறது. மிக்க நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிறு வயதில், வாழை மரங்கள் அடர்ந்திருக்கும் இக்கோவிலுக்கு சென்ற ஞாபகம். அவ்வளவு பசுமை, குளுமை.

இங்குள்ள சரஸ்வதி தேவி சன்னிதியில், கோடைக்காலம் முடிந்து பள்ளி செல்லும் குழந்தைகள் எல்லாம், முதல் நாள் வருவார்கள் பாருங்கள், அவ்வளவு கூட்டம் இருக்கும்!

அரனும் அரியும் அருகருகே அமர்ந்து அருள் பாலிக்கும் தலம் பற்றி நன்கு எழுதி உள்ளீர்கள் பாலா!

enRenRum-anbudan.BALA said...

குமரன்,
நன்றி.
//பெரியவனை, திருக்குறுங்குடி எம்பெருமானை, திருதண்கால் ஊரானை, கரம்பனூர் உத்தமனை என்று பல திவ்ய தேசங்களின் பெருமாள்களைப் பாடிவிட்டுப் பின்னர்
முத்துகள் இலங்கும் கருமையான ஒலி செய்யும் பெருங்கடல்கள் ஏழும் மலையேழும் இவ்வுலகங்கள் ஏழும் உண்டும் அவை ஆராது தன் பெரும்பசிக்குச் சோளப்பொறி போல் இருக்கிறது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே என்று பாடியிருக்கிறார்.
//
அருமையான விளக்கம்.
//'கடல் ஏழு, மலை ஏழு, உலகங்கள் ஏழு இவை உண்டு பின்னும் ஆராது என்றிருந்தானை'
//
இங்கு "உண்டு பின்னும் ஆராது என்றிருந்தானை' " என்பது அவை அனைத்தும் அவனுள் அடக்கம் என்ற பொருளில் வரும்.
எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

KRS,
மிக்க நன்றி !

//சிறு வயதில், வாழை மரங்கள் அடர்ந்திருக்கும் இக்கோவிலுக்கு சென்ற ஞாபகம். அவ்வளவு பசுமை, குளுமை.
//
நான் சென்றதில்லை. சீக்கிரம் செல்லும் உத்தேசம் உள்ளது :)

எ.அ.பாலா

குமரன் (Kumaran) said...

//இங்கு "உண்டு பின்னும் ஆராது என்றிருந்தானை' " என்பது அவை அனைத்தும் அவனுள் அடக்கம் என்ற பொருளில் வரும்//

அது மட்டுமில்லை பாலா. இவை அனைத்தும் அவனுள் அடக்கம் என்பதோடு, இவை அனைத்தும் அவனில் ஒரு சிறு பகுதி என்பதையும் 'ஆராது என்றிருந்தானை'யில் சொல்கிறார் ஆழ்வார் என்றெண்ணுகிறேன். புருஷ சூக்தத்தில் வருகிறதே - இங்கே தெரிவது கால் பங்கு. பிரகிருதிக்கு அப்பால் இருப்பது முக்கால் பங்கு என்று. இங்கே ஆழ்வார் சொன்னவை எல்லாம் பிரகிருதி மண்டலத்தில் அடக்கம். அவை இறைவனின் சிறு பங்கே (கால் பங்கு). கீதையிலும் கண்ணன் சொல்கிறானே - இங்கே பிரகிருதி மண்டலத்தில் இருப்பவை எல்லாம் என் பெருமையில் மிகச்சிறிய பகுதியே என்று. ஆழ்வார் அதனையும் இங்கே குறிக்கிறார் என்று தோன்றுகிறது. ஆகா. தொட்டால் பெருகி ஓடும் போல் இருக்கிறதே ஆழ்வாரின் அருளிச்செயல்.

enRenRum-anbudan.BALA said...

Kumaran,

Beautifully said ! Thanks !

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails